என் குடும்ப வாழ்க்கையை சிதைக்கிறார்! எல்லாம் பொய்... நடிகை சாந்தினி வழக்கில் புதிய புயலை கிளப்பும் முன்னாள் அமைச்சர் மனைவி
குடும்ப வாழ்க்கையை சிதைப்பதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.
மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமடைந்தவர்.
இந்த நிலையில் சென்னைக்கு வந்து பொலிசில் சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான் மலேசியா குடியுரிமைப் பெற்ற திருமணமாகாத பெண்.
கடந்த 2017-ம் ஆண்டு, அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்னிடம் கூறினார்.
அதனால், நான் அமைச்சரின் இல்லத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நேரில் மணிகண்டனைச் சந்தித்தேன். அன்றைய தினம் சுற்றுலா துறை சம்பந்தமாக என்னிடம் மணிகண்டன் பேசினார்.
மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்பந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும் என்று கூறி என்னுடைய செல்போன் நம்பரைப் பெற்றுக் கொண்டார்.
அன்றைய தினம் மாலையில் எனக்கு அமைச்சர் மணிகண்டன் போனில் பேசினார். சில தினங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேச ஆரம்பித்தார்.
நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டதாகவும், ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார்.
மேலும், அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் மனைவி ஒரு கொடுமைக்காரி என்றும், என்னைப் போல ஒரு அழகான பெண் என் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில், இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
இதனால் மூன்று முறை கருவுற்றேன், ஆனால் கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததோடு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் பொலிசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி, பாலியல் புகாரளித்திருப்பதால் மருத்துவ பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக மணிகண்டன் மனைவி ராமநாதபுரம் பொலிசில் நடிகை சாந்தினி மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், சாந்தினி என் குடும்ப வாழ்க்கையை சிதைக்கிறார், அந்த நோக்கத்தோடு தான் செயல்படுகிறார்.
எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் என் கணவர் மீது பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும், சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.