எலான் மஸ்க்கை சந்திக்க வைப்பதாக கூறி விமானியிடம் லட்சக்கணக்கில் பண மோசடி
எலான் மஸ்க்கை சந்திக்க வைப்பதாக கூறி ஓய்வு பெற்ற விமானி ஒருவரிடம் இருந்து ரூ.72 லட்சம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்.
இவர், தற்போது 420 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறார்.
இந்நிலையில், எக்ஸ் தளம் மூலம் ஒருவர் தன்னை எலான் மஸ்க்கை சந்திக்க வைப்பதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்து விட்டதாக ஓய்வு பெற்ற விமானி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி சக்தி சிங் லும்பா. 65 வயதான இவர் ஓய்வுக்கு பின்னர் தற்போது மங்கர் பகுதியில் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார்.
லட்சங்களை இழந்த விமானி
இவரிடம், எக்ஸ் சமூக ஊடகம் மூலமாக, தான் எலான் மஸ்க் நிறுவன மேலாளர் Anna Sherman என ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
அடுத்ததாக MayeMuskXOfficials என்ற எக்ஸ் கணக்கு, எலான் மஸ்க்கின் தாய் என்றும், அவரை பின்தொடருமாறும் சக்தி சிங்கை வற்புறுத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் நடந்த உரையாடல்களை காட்டி, எலான் மஸ்க்கின் தாய் என நம்ப வைத்துள்ளார்.
தொடர்ந்து, எலான் மஸ்கின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தால், எலான் மஸ்க் இந்தியா வரும்போது அவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அன்னா ஷெர்மன் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சக்தி சிங், ஆரம்பத்தில் ரூ.2.91 லட்சம் அன்னா ஷெர்மனிற்கு அனுப்பியுள்ளார். அவர் உங்களது முதலீடு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் மேலும் முதலீடு செய்யுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, 22 வங்கி மற்றும் பேபால் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தமாக ரூ.72.16 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
ஒரு கட்டத்தில் சக்தி சிங்கிற்கு பணத்தேவை ஏற்படவே, தனது பணத்தை திரும்ப தருமாறு கூறியுள்ளார். பணத்தை திரும்ப அனுப்ப ₹7.3 லட்சம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
வரியை கழித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை திரும்ப தருமாறு சக்தி சிங் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் தனது அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.
எலான் மஸ்க் பெயரில் அதிகரிக்கும் மோசடி
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக்தி சிங் இது தொடர்பாக சைபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மோசடியாளரை தேடி வருகின்றனர்.
எலான் மஸ்க் பெயரை பயன்படுத்தி, 2018 மற்றும் 2022 காலகட்டத்தில், 2,700 பேரிடம் $5.4 மில்லியனுக்கும் (ரூ.46 கோடி) அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் போல் AI மூலம் போலியான புகைப்படங்களை வைத்து fake id உருவாக்கி, ஒரு பெண்ணை தனது கோடீஸ்வர கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்ததோடு, ரூ.7 கோடி மோசடி செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |