இருமலை விட இதில்தான் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாம்: பிரித்தானிய ஆய்வில் வெளியான தகவல்
இருமல், தும்மல் மூலமாக கொரோனா பரவும் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.
ஆனால், இருமலைவிட வேறொரு விடயம் அதிகமாக கொரோனாவை பரப்புமாம். அது, பேசுவது! சும்மா வளவளவென்று பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாம்.
30 விநாடிகள், மாஸ்க் அணியாமல், சரியான காற்றோட்டமில்லாத அறை ஒன்றில் ஒருவர் பேசிக்கொண்டிருப்பது, ஒருவர் முன் அரை விநாடி இருமுவதைவிட அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இருமல் வேகமாக பெரிய எச்சில் துளிகளை உருவாக்கும் என்றால், பேசுவது அதிக அளவு சிறிய எச்சில் துளிகளை உருவாக்கும்.
அதுவும், அந்த துகள்கள் காற்றில் ஒரு மணி நேரம் வரை சுற்றிக்கொண்டிருக்கும் என்கிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வு ஒன்று.
உதாரணமாக, மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறை ஒன்றில் ஒரு ஆசிரியர் பாடம் எடுப்பதைக் கூறலாம்.
இருமுவதால் கொரோனா பரவும் என்பதை அறிந்துள்ள மக்கள், பாதுகாப்பாக கைக்குட்டை ஒன்றால் வாயை மூடி இருமுகிறார்கள்.
ஆனால், பேசும்போது அப்படி செய்யமுடியாது அல்லவா, ஆகவே, மாஸ்க் அணிந்துகொள்வது அந்த பிரச்சினையை தடுத்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான Dr Pedro de Oliveira.