எங்கள் உற்சாகமே மசாலா தோசையும், ஃபில்டர் காபியும்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பகிர்ந்த நினைவுகள்
சந்திரயான் -3 விண்கல திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் தங்களுடைய நினைவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனால், உலகமே இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.
விஞ்ஞானிகளின் சுவாரஸ்ய தகவல்கள்
* பத்திரிகையாளர் பர்கா தத் தன்னுடைய பதிவில்,"உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்திரயான் -3 விண்கல திட்டத்தின் இறுதிகட்ட பணியின் போது மாலை 5 மணிக்கு கொடுக்கப்பட்ட மசாலா தோசையும், ஃபில்டர் காபியும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை அளித்தது" என்று கூறியுள்ளார்.
* இஸ்ரோ விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா கூறுகையில்," தினமும் மாலை 5 மணிக்கு மசாலா தோசை மற்றும் ஃபில்டர் காபி வழங்கியதால் நீண்ட நேரம் இருப்பதற்கு எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்" என்றார்.
* முன்னாள் இஸ்ரோ இயக்குநர் சுரேந்திர பால் கூறும்போது,"வெறும் ரூ.150 ரூபாய் செலவில் மாட்டு வண்டியில் தகவல் தொடர்பு செயற்கை கோளை கொண்டு சென்றோம்" என்ற மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.
* முன்னாள் இஸ்ரோ தலைவரான மாதவன் நாயர் கூறுகையில்,"அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் நாம் செலவு செய்கிறோம். இந்திய அல்லது வெளிநாடுகளில் உள்ள மற்ற நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகளை விட நாம் அதிகமாக முயற்சி செய்கிறோம்" என்றார்.