பிரான்சுக்கு கடும் நெருக்கடி தரும் ஆபிரிக்க நாடு: தூதுவர் வெளியேற்றம்
பிரான்ஸ் மற்றும் மாலி நாடுகளுக்கு இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தூதுவர் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மாலியின் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் கூறிய கடும்போக்கான கருத்துக்கள் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலிக்கான பிரான்ஸ் தூதுவர் Joel Meyer நாட்டைவிட்டு வெளியேற 72 மணி நேரம் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் அவரை திரும்ப அழைத்துள்ளது.
கடந்த வாரம் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவிக்கையில், மாலியின் இராணுவ ஆட்சி என்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி கட்டுப்பாடு எதுவுமற்றது என குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் 2020ல் மாலியின் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
மேலும், பிப்ரவரியில் தேர்தல்களை ஏற்பாடு செய்வதற்கான உடன்பாட்டை இராணுவ ஆட்சிக்குழு மாற்றியமைத்து, 2025 வரை அதிகாரத்தை வைத்திருப்போம் என உறுதியளித்ததை அடுத்தே இந்த பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.
இதனிடையே, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் மாலியில் இருந்து தமது படைகளை வெளியேற்றப் போவதாக பிரான்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இங்கு 2013ல் இருந்தே ப்ரெஞ்சு துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது மாலியில் இருந்து பிரெஞ்சு தூதுவர் வெளியேற்றப்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல்கள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.