வெளிநாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறார்கள்: சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை
நியூயார்க் மற்றும் லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிறார்கள் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நியூயார்க் நகர மருத்துவமனைகளில் திடீரென்று சிறார்கள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பரில் மட்டும், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இதே நிலை பிரித்தானியாவிலும் காணப்பட்டுள்ளது.
டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 525 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே வாரத்தில் இந்த எண்ணிக்கை இருமடங்கானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் சிறார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த சிறார்கள் அதிகம் காணப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரிந்துரைக்கப்படும் ஒரு ஆய்வில் குழந்தைகள் ஓமிக்ரானால் அதிகம் பாதிக்கப்படலாம் என்றே தெரியவந்துள்ளது.
இதன்படி, குழந்தைகள் ஓமிக்ரான் நோய்த்தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 2020ல் கொரோனா முதல் அலையை விட 20 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனையை நாடும் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தொற்றின் தன்மை கணக்கிடப்படுவதாக தெரிவித்துள்ள சுவிஸ் நிபுணர்கள், தற்போதைய சூழலில் சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சிறார்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும்,
இருப்பினும் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.