துஸ்பிரயோக வழக்கில் தீர்ப்பு: சுவிஸில் சிக்கிய பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பம்
சுவிட்சர்லாந்தில் ஊழியர்களை முறையாக நடத்தப்படாதது மற்றும் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஊழியர்கள்
ஜெனீவாவில் அமைந்துள்ள தங்களது மாளிகையில் பணியாற்ற இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஊழியர்களை முறையாக நடத்தவில்லை, சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்டவையே இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜா, அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோர் குற்றவாளிகள் என சுவிஸ் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத வேலைவாய்ப்பு, முறையாக நடத்தப்படாதது, துஸ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் நான்கு முதல் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மிகவும் தீவிரமான ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றே ஹிந்துஜா தரப்பு சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
ஜெனீவாவில் அமைந்துள்ள தங்களது மாளிகையில் பணியாற்ற இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஊழியர்களுக்கு நாளுக்கு 7 பவுண்டுகள் மட்டுமே சம்பளமாக வழங்கியுள்ளனர்.
18 மணி நேரம் வேலை
அதுவும் நாளும் 18 மணி நேரம் வேலை வாங்கியுள்ளனர். சுவிஸ் சட்டத்தின் கீழ் அமுலில் இருக்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையை வழங்கியதாகவே வெளிச்சத்துக்கு வந்தது.
மட்டுமின்றி, அந்த ஊழியர்களின் கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் சொத்துமதிப்பு கொண்ட ஹிந்துஜா குடும்பம், அந்த ஊழியர்களை மிகவும் அரிதாகவே வீட்டுக்கு வெளியே செல்ல அணுமதித்துள்ளனர்.
விசாரணையின் போது அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், ஹிந்துஜா குடும்பம் அந்த ஊழியர்களுக்கு செலவிடும் தொகையை விட பல மடங்கு தங்கள் நாய்களுக்கு செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஹிந்துஜா குழுமமானது எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. லண்டனில் செயல்பட்டுவரும் Raffles ஹொட்டலும் ஹிந்துஜா குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |