கனடாவில் தெற்காசிய வணிகங்களை குறிவைக்கும் குழு: சிறப்பு பொலிசார் விசாரணை
கனடாவில் தெற்காசிய வணிகங்களை குறிவைத்து அதிகரித்துவரும் பணம் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பீல் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதுபோன்ற 16 வழக்குகள்
இந்த விவகாரம் தொடர்பில் EITF என்ற சிறப்பு அதிகாரிகள் குழுவை பீல் பொலிசார் சனிக்கிழமை அறிமுகம் செய்துள்ளனர். இந்த சிறப்பு குழுவானது தெற்காசிய வணிகங்களை குறிவைக்கும் நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கும்.
தற்போது இதுபோன்ற 16 வழக்குகளை தாங்கள் விசாரித்து வருவதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பலரும் சமூக ஊடக பக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளப்பட்டு, பணம் கேட்டு மிரட்டப்பட்டதாகவும் அல்லது தாக்குதலுக்கு இலக்காகலாம் என மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சிலர் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் தொழில், பெயர், அலைபேசி இலக்கம், முகவரி உள்ளிட்ட மொத்த தகவலும் திரட்டுப்பட்டு சந்தேக நபர்கள் மிரட்டல் விடுப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்தியா கவலை தெரிவித்திருந்தது
இப்படியான அச்சுறுத்தலுக்கு எவரேனும் ஆளானால் கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டாம் என்று பொலிஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், EITF அமைப்பை தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்களும் மின் அஞ்சல் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனடாவில் இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்பில் இந்தியா கவலை தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது பீல் பொலிசார் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |