சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களை குறிவைத்து புதிய சட்டங்கள்: எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றம்
சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களைக் குறிவைத்து புதிதாக சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களின் அடையாளங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களுடைய மொபைல் போன்கள், டேப்லட்கள், கம்பியூட்டர்கள் மற்றும் USB ஸ்டிக்குகளை ஆராய அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கும் சட்டம் ஒன்று நேற்று சுவிஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
இது மனித உரிமை மீறல் என குரல் கொடுத்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், வேறு எவ்வகையிலும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரின் அடையாளத்தைக் கண்டறியாத ஒரு நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்த புதிய சட்டம் பயன்படுத்தப்படும் என நீதித்துறை அமைச்சரான Karin Keller-Sutter தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு முடிவையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் என கூறப்படும் இந்த சட்டம் 2022 இறுதிவரை அமுலில் இருக்கும்.
கடந்த சில மாதங்களாக புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து இந்த நடவடிக்கை தேவை என அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அடுத்தபடியாக, சுவிட்சர்லாந்தில் தற்காலிக வாழிட உரிமம் வைத்திருப்போர் பயணம் செய்ய தடை விதிக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான விவாதம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.