ரஷ்யாவுக்கு எதிராக... பிரித்தானியாவுடன் அணிதிரண்ட 20 நாடுகள்
போர் நிறுத்தம் தொடர்பில் தமது திட்டத்தை உக்ரைன் நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த பிரித்தானியாவுடன் 20 நாடுகள் அணிதிரண்டுள்ளது.
இராணுவப் பிரதிநிதிகள்
போருக்குப் பிந்தைய தீர்வின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் துருப்புக்களுடன் ஒரு அமைதி காக்கும் படையை களமிறக்க பிரித்தானியாவும் பிரான்சும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவுஸ்திரேலியா, துருக்கி மற்றும் கனடா ஆகிய நாடுகளின் இராணுவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த திட்டத்தின் இறுதி வடிவம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் விவாதிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்மொழிந்துள்ள இந்த திட்டமானது தற்போது தொடக்க நிலையில் இருப்பதாகவும், ஆனால் இதுவரையான விவாதங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இந்த நகர்வுக்கு உடனடியாக ரஷ்யாவில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov தெரிவிக்கையில், இது நேட்டோ உறுப்பினர்களின் நேரடி ஈடுபாட்டைக் குறிப்பதாகவும் அதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அழுத்தமளிக்க வேண்டும்
உக்ரைனுக்கு எதிரான போரை தொடங்கியது ரஷ்யா என்பதால், ரஷ்யாவையே அதை நிறுத்த அனைத்து நாடுகளும் அழுத்தமளிக்க வேண்டும் என்பதே உக்ரைன் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.
மட்டுமின்றி, எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் வான் மற்றும் கடல் தாக்குதல்களை நிறுத்துவதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எரிசக்தி அல்லது பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான இராணுவ நடவடிக்கை மற்றும் கருங்கடலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அனைத்து போர்க் கைதிகளையும் விடுவிப்பது நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கான ஒரு வழிமுறையாகவும் பயன்படுத்தப்படலாம் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு அமைதி வேண்டும் ஆனால் உக்ரைன் மண்ணை விட்டுக்கொடுத்து அதை அடையும் எண்ணம் இல்லை என்றார். இதனிடையே, சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை முன்னெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |