பிரான்ஸ் நாட்டில் சில மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்
Face masks are once again compulsory in some French hospitals: பிரான்ஸ் மருத்துவமனைகள் சிலவற்றில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கோவிட் அதிகரித்துவருவதாலும், ப்ளூ சீசன் வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கிவிட்டதாலும், மருத்துவமனைகள் சிலவற்றில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மாஸ்க்
சில மருத்துவமனைகளில் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் வருபவர்களும், அவர்களைப் பார்க்க வருபவர்களும், மருத்துவமனை பணியாளர்களும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில மருத்துவமனைகளில் அக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதலே மாஸ்க் அணிவது கட்டாயம் என்னும் விதி அமுலுக்கு வந்துவிட்டதாக உள்ளூர் ஊடகமான La Presse de la Manche தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கழிவுநீரில் கோவிட் கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சில மருத்துவமனைகள் முன்கூட்டியே துவக்கியுள்ளன.
இதற்கிடையில், இந்த ஆண்டு ப்ளூ காய்ச்சலும் வழக்கத்தைவிட சீக்கிரமாகவே அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
ஆக, இப்படி தொற்றுகள் பரவிவருவதைத் தொடர்ந்து, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், தொற்று தாக்கும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் சில உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் வாழ்பவர்கள், கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் முதலான சுய சுத்த நடவடிக்கைகளைக் கைக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் பரிந்துரைத்துள்ளார்கள்.