கொரோனா பரிசோதனை முறைகேடு: சிறைத் தண்டனை பெறும் முதல் பிரித்தானியர்
விமான பயணம் மேற்கொள்ள கொரோனா பரிசோதனை முறைகேடில் ஈடுபட்ட விவகாரத்தில் பிரித்தானியர் ஒருவர் முதல் முறையாக சட்டச் சிக்கலை எதிர்கொள்ள இருக்கிறார்.
இசை ஆசிரியரான 33 வயது Philip Cunningham என்பவரே கொரோனா சோதனை முறைகேடில் சிக்கியுள்ளவர். எகிப்துக்கு செல்லும் பொருட்டு மே 4ம் திகதி ஹீத்ரோ விமான நிலையம் சென்றுள்ளார் Philip Cunningham.
அப்போது விமான நிலைய ஊழியர்களிடம் அவர் காண்பித்த கொரோனா சோதனை சான்றிதழ் தொடர்பில் சந்தேகம் எழவே, அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் சமர்ப்பித்த சான்றிதழில் ஒரு இலக்கம் தவறியிருந்ததே, ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்றே சாதித்துள்ளார்.
தொடர்ந்து விசாரணை அதிகாரிகள், குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு, Philip Cunningham கொரோனா பரிசோதனை மேற்கொண்டாரா என்பதை விசாரித்துள்ளனர்.
ஆனால் அவர்களும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என தெரியப்படுத்தவே, Philip Cunningham உடனடியாக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஹீத்ரோ விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
தாம் ஒரு இசை ஆசிரியர் எனவும், இந்த கைது நடவடிக்கை தமது தொழிலை மொத்தமாக பாதிக்கும் எனவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது உண்மையில் மிக முக்கியமான விடயம் எனவும், உரிய முறையில் நடவடிக்கை எடுப்பது கட்டாயம் என நீதிபதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமது தவறை ஆசிரியர் Philip Cunningham ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மட்டுமின்றி, ஜூன் 4 அன்று பர்மிங்காம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.