முன்னணி வீரரை வாங்கத்துடிக்கும் சிஎஸ்கே அணி - எதிர்பார்க்கும் ரசிகர்கள்
ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஒரு வீரரை மீண்டும் அந்த அணி ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் பிரமாண்டமாக நடக்க உள்ளது. ஏற்கனவே அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டதால் மெகா ஏலத்தின் மீது எதிர்பார்ப்புகள் தொடங்கிவிட்டன.
இதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கவுள்ளது என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே வயதானவர்களின் அணி என விமர்சனங்கள் உள்ளதால் இந்த முறை இளம் வீரர்களை அதிகளவில் எடுக்குமா? அல்லது அனுபவம் மிகுந்த வீரர்களை எடுக்குமா? என கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே ஓய்வு வயதில் இருக்கும் ஒரு வீரரை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அது கடந்த ஆண்டு வரை அந்த அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்த ஃபாப் டூப்ளசிஸ் தான்.
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணி வயதை பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்ளும் அணி இல்லை என்றும், ருதுராஜுடன் சேர்ந்து டூப்ளசிஸ் நல்ல ஜோடியாக அமைந்துவிட்டார். எனவே அதனை அப்படியே வைத்துக்கொள்ளவே அணி நிர்வாகம் விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
37 வயதாகும் டூப்ளசிஸ் கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்தார். அவர் 633 ரன்களை விளாசினார். முதலிடத்தில் டூப்ளசிஸின் ஓப்பனிங் ஜோடியான ருதுராஜ் கெயிக்வாட் 635 ரன்களுடன் ஆரஞ்ச் கேப்பை தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.