மகாராணியாரின் பாதுகாவலர்களை ஏமாற்றி அவர்களுடன் தங்கிய நபர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில், சமீபத்தில் ஒருவர் தான் ஒரு பாதிரியார் என்று கூறி மகாராணியாரின் பாதுகாவலர்களை ஏமாற்றி அவர்களுடன் தங்கினார்.
அவரைத் தங்கள் பாதிரியாரின் நண்பர் என்று நம்பிய பாதுகாவலர்கள், அவருக்கு சிற்றுண்டி வழங்கி உபசரித்துள்ளார்கள்.
பிறகு அவரை பொலிஸ் தேடி வந்தபோதுதான், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஏமாற்றுக்காரர் குறித்து மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
அந்த நபர் கடந்த சில நாட்களாகவே விண்ட்சர் பகுதியில் சுற்றி வருவதாக மதுபான விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தான் இளவரசர் ஹரி மற்றும் மேகனுடைய நண்பன் என்று கூறி இலவச உணவு உண்ண அவர் முயன்றதாகவும், அந்த விடுதி உரிமையாளர் அவரை நம்பாமல் வெளியேற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், George Ghanem என்னும் மற்றொரு உணவக உரிமையாளரும், தானும் அந்த நபரை சந்தித்துள்ளதாகவும், அமெரிக்கர் போல பேசிய அவர், கடந்த வாரத்தில் இரு முறை தன் உணவகத்தின் சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் பக்கத்தில் உள்ள தேவாலயத்தின் பாதிரியார் என்று தன்னிடம் கூறியதாகவும், ஆனால், அந்த தேவாலயத்தில் தான் அவரப் பார்த்ததில்லை என்றும் கூறும் George, அவர் ஒரு கண்ணியமான நபர் போல காட்சியளித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்கர் போல பேசிக்கொண்டு திரிந்தாலும், அந்த நபர் ஏற்கனவே உள்ளூர் பொலிசாருக்கு அறிமுகமானவர் என தெரியவந்துள்ளது.