பிரான்சில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஒரு புதிய மோசடி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து டெக்சி மோசடி ஒன்று துவங்கியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போலி டெக்சி சாரதிகள் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து மோசடி ஒன்றில் ஈடுபட்டுவருவதாக எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்ன மோசடி?
பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர்கள் சிலர், நீண்ட காலமாக பாரீஸில் வாழ்ந்துவரும் அமெரிக்க சமூக ஊடகவியலாளர்கள் சிலர் உதவியுடன் இப்படி ஒரு மோசடி நடைபெறுவதை உறுதி செய்துள்ளார்கள்.

வழக்கமாக அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் எப்படி உடை அணிவார்களோ அதேபோல உடையணிந்த இந்த குழு, விமான நிலையமொன்றின் வாசலில் ஒன்றும் தெரியாததுபோல் விழித்துக்கொண்டு நிற்க, உடனே அவர்களை அணுகியுள்ளார் மோசடியாளர் ஒருவர்.
அவர் ஏற்பாடு செய்த டெக்சி, நேரடியாக பாரீஸிலுள்ள ஒரு இடத்துக்குச் செல்வதற்கு பதிலாக, வேண்டுமென்றே பல தெருக்களை சுற்றிவர, டெக்சியின் மீற்றரில் கட்டணம் ஏறிக்கொண்டே சென்றுள்ளது.
பயணிகள் இறங்கியதும், அவர்களிடம் 190 யூரோக்கள் கேட்டுள்ளார் டெக்சியின் சாரதி.
விடயம் என்னவென்றால், விமான நிலையத்திலிருந்து இவ்வளவு தொலைவுக்கு 56 முதல் 65 யூரோக்கள்தான் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக, அந்த சாரதி ஏமாற்றுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துள்ளது. அத்துடன், இந்த மோசடியாளர்கள் குற்றச்செயல்கள் புரியும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தனியாக செயல்படவில்லை, பலர் இணைந்தே இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த டெக்சி மோசடியில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படுவதுடன், அவர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியிலிருந்து தப்புவது எப்படி?
பாரீஸ் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் பயணிக்க இவ்வளவு தொகைதான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.
சுற்றுலாப்பயணிகள் இந்த விடயங்களை நினைவில் வைத்துக்கொள்வதுடன், அதிகாரப்பூர்வ டெக்சி நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டுள்ள டெக்சிகளை பயன்படுத்துமாறும், யாராவது தன்னை டெக்சி சாரதி என்று கூறி அணுகினால் அவர்களை தவிர்க்குமாறும் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
முறைப்படி உரிமம் பெற்ற டெக்சி சாரதிகளுக்கு கட்டணம் குறித்து பேரம் பேச அனுமதி இல்லை. ஆக, யாராவது உங்களிடம் டெக்சி கட்டணம் குறித்து பேரம் பேசினாலே அவர் உரிமம் பெறாதவராக இருக்கலாம் என உஷாராகிவிடுவது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |