கனடாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மகளை இரண்டு மாதங்களாக தேடும் குடும்பம்
கனடாவில் மாணவி ஒருவர் திடீரென மாயமான நிலையில், அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ள நிலையிலும், அவளது குடும்பத்தார் அவளை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். அதேபோல் தங்களில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர்களை மீண்டும் காணும்வரை, யார் என்ன சொன்னாலும் அதை நம்பாமல், தங்கள் குடும்ப உறுப்பினர் உயிருடன்தான் இருப்பார் என்று நம்புவதுதானே குடும்பம்!
அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறது Madison Roy-Boudreau என்ற 14 வயது மாணவி ஒருவரின் குடும்பம்.
கடந்த மே மாதம் 11ஆம் திகதி பள்ளிக்குச் சென்ற Madison, மீண்டும் வீடு திரும்பவே இல்லை.
பல முறை பொலிசார் நிலம் வழியாகவும், வான் வழியாகவும் தேடியும் Madison கிடைக்காததால், பொலிசார் அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் கருதுவதாகவும், அதே ரீதியில்தான் தற்போது விசாரணையைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், Madison காணாமல் போன அன்று, அவள் ட்ரக் ஒன்றில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த ட்ரக்கை கைப்பற்றிய பொலிசார், அதன் சாரதியை கைது செய்துள்ளார்கள். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக, Steven Laurette (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் Madisonஇன் தந்தையான Jason Boudreau. ஆனால். Lauretteதான் அந்த ட்ரக்கின் சாரதியா, அவர்தான் வழக்கில் முக்கியமான குற்றவாளியா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை
வழக்கு இப்படி நடந்துகொண்டிருக்க, இன்னமும் Madisonஇன் தந்தையான Jason Boudreau தினமும் தன் காரை எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்று மகளைத் தேடி வருகிறாராம்.
நாங்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை என்று கூறும் Jasonஇன் குடும்ப நண்பரான Maggie Lavigne என்பவர், பொலிசார் அது ஒரு கொலை என்று கூறினாலும் எங்களால் அதை நம்ப முடியவில்லை என்கிறார்.
Madison திடீரென ஒருநாள் வீட்டுக்கு வருவாள் என்று நம்பி நாங்கள் வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் அது நடக்கப்போவதில்லை என்று எங்கள் ஆழ்மனது கூறுவதை மறுப்பதற்கில்லை என்கிறார் Maggie Lavigne.