கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் திடீர் மனமாற்றம்: புலம்பெயர்தலுக்கு ஆதரவாக அதிரடி நடவடிக்கை
தொடர்ந்து புலம்பெயர்தலுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்த கனேடிய புலம்பெயர்தல் அமைச்சருக்கு, திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. மாகாணமொன்றின் முடிவையும் மீறி, அம்மாகாண முடிவுக்கு எதிராக, புலம்பெயர்தலுக்கு ஆதரவாக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் அவர்!
புலம்பெயர்தலுக்குக் கட்டுப்பாடு விதித்த மாகாணம்
கனேடிய மாகாணமான கியூபெக், தனக்கென விதிகள் வகுத்துக்கொள்வது வழக்கம் என்பதை, பலரும் அறிந்திருக்கலாம்.
அம்மாகாணம், ஆண்டொன்றிற்கு சுமார் 10,000 குடும்ப மறு ஒருங்கிணைப்பு விசாக்கள் மட்டுமே வழங்குவது என முடிவு செய்துள்ளது. இது மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும்.
கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் திடீர் மனமாற்றம்
இந்நிலையில், தான் பதவியேற்றது முதல், இதுவரை புலம்பெயர்தலுக்கெதிராக கருத்துக்கள் தெரிவித்து வந்த புதிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர், திடீரென மனமாற்றம் அடைந்துள்ளதுபோல தெரிகிறது.
தான், ஒருங்கிணைப்பு விசாக்கள் வழங்குவதற்கான கட்டுப்பாட்டை நீக்குமாறு கியூபெக் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Christine Fréchetteஇடம் பல மாதங்களாக கெஞ்சி வருவதாகவும், அதிக அளவில் புலம்பெயர்ந்தோரை அனுமதிக்குமாறு கேட்டுக் கேட்டு, தான் காத்திருந்து களைத்துப்போனதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் மில்லர்.
பல மாதங்களாக கேட்டும் கியூபெக் மாகாணம் நடவடிக்கை எடுக்காததால், இப்போது பெடரல் அரசு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமைச்சர் மில்லர்.
ஆகவே, கியூபெக் விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறி, கியூபெக்கிலுள்ள தங்கள் குடும்பத்துடன் இணைய விரும்பும் புலம்பெயர்வோருக்கு, தனது அமைச்சகம், அதாவது, பெடரல் புலம்பெயர்தல் அமைச்சகம், நிரந்தர குடியிருப்பு அனுமதிகள் வழங்கத் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் மார்க் மில்லர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |