பிரித்தானியாவில் சொந்த பிள்ளைகள் உட்பட மூவரை கொலை செய்த இந்தியர்: நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்
பிரித்தானியாவில் செவிலியரான மனைவி மற்றும் சொந்த பிள்ளைகள் இருவரையும் கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட இந்தியர்.
மூச்சுத்திணறல் காரணமாக
கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 35 வயதான அஞ்சு அசோக், 6 வயது ஜீவா, 4 வயது ஜான்வி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
@PA
உடற்கூராய்வில் மூவரும் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் கழுத்தில் காணப்பட்ட காயங்கள், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நார்தம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான 52 வயதான சஜு செலவலேல், தமது இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட சஜு, தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடுவதை எதிர்வரும் ஜூலை 3ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி கெட்டரிங் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் மருத்துவ உதவிக்குழுவினர் அவசரமாக வரவழைக்கப்பட்டனர். இதில் அஞ்சு என்பவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
குற்றுயிராக காணப்பட்ட இரு சிறார்கள்
குற்றுயிராக காணப்பட்ட ஜீவா மற்றும் ஜான்வி ஆகிய இரு சிறார்களும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளனர். இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு.
2021 முதல் கெட்டரிங் பகுதியில் அமைந்துள்ள பொது மருத்துவனை ஒன்றில் எலும்பியல் துறையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மரணம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அஞ்சு ஒரு உறுதியான மற்றும் இரக்கமுள்ள செவிலியராக இருந்தார், அவர் தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களால் நேசிக்கப்பட்டார் மற்றும் மதிக்கப்பட்டார் என சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.