கனேடிய பெண்ணின் இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம்... தொலைக்காட்சி செய்தியால் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்!
உடல்நலக்குறைவால் உயிரிழந்த கனேடிய பெண்ணின் இறுதிச்சடங்குக்காக தயாராகிக்கொண்டிருந்தது அவரது குடும்பம்.
அப்போது அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் குறித்த செய்தி, அக்குடும்பத்தாரின் கவனத்துக்கு வந்துள்ளது.
அந்த செய்தியில், மருத்துவமனையில் செவிலியர்களின் கண் பார்வையில் படாத வகையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணி உயிரிழந்த சம்பவம் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது தங்கள் தாயைக் குறித்து எழுதப்பட்ட செய்தி என்பதை உணர்ந்துகொண்டுள்ளனர் அந்த குடும்பத்தினர்.
நடந்தது என்னவென்றால், Candida Macarine (87 வயது) என்ற பெண்மணி, சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிவதற்காக அவரை ஒரு அறையில் அனுமதித்துள்ளனர் அந்த மருத்துவமனையின் ஊழியர்கள்.
அந்த குறிப்பிட்ட அறை ஒரு ஒதுக்குப்புறமாக இருந்துள்ளதால், அங்கு என்ன நடக்கிறது என செவிலியர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்கமுடியாத ஒரு நிலை இருந்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதே அறையில் Candida அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று இரவு அவரை செவிலியர்கள் சென்று கவனித்திருக்கவேண்டும், ஆனால், அந்த அறை கண்ணில் படாததால் அங்கு யாரும் செல்லவில்லை.
மறுநாள் Candida தரையில் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. சில்லிட்டுப்போன அவரது உடலைப் பார்க்கும்போது, அவர் உயிரிழந்து பல மணி நேரம்ஆகியிருக்கவேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
அவர் எப்படி படுக்கையில் இருந்து இறங்கினார், எப்படி உயிரிழந்தார் என்னும் விடயங்கள் யாருக்கும் தெரியாது
. ஆனால், இது எதுவுமே Candidaவின் குடும்பத்துக்கு தெரிவிக்கப்படாமல் அவரது உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களும் இறுதிச் சடங்குக்கு ஆயத்தமாகியுள்ளார்கள்.
அப்போது தொலைக்காட்சியில் வந்த செய்தி மூலமே, தங்கள் தாய் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்ததும், அதை அவர்கள் தங்களிடம் மறைத்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
தாய் இறந்த துக்கத்தில் இவ்வளவு நாட்களும் இருந்த குடும்பம், அந்த செய்தி தெரியவந்ததையடுத்து, இப்போது கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.
ஆகவே, Candida Macarineஇன் குடும்பம், இந்த பிரச்சினையை சட்டப்படி அணுக உள்ளதாக தெரிவித்துள்ளது.