நான் கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பது உண்மைதான்: முதன்முறையாக மனம் திறக்கும் பிரபல நடிகர்
*தான் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
*ஆனால், தான் ஒரு இந்தியன், இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன் என்கிறார் அவர்.
பிரபல இந்திய நடிகரான அக்ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும்.
அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும்.
இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் அக்ஷய்.
நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் என்கிறார் அக்ஷய்.
ஒரு கட்டத்தில் தன் திரைப்படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்தபோது, கனடாவுக்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்து கனடா பாஸ்போர்ட் பெற்றதை நினைவுகூருகிறார் அவர்.
சில வருடங்களுக்கு முன், என்னுடைய 14, 15 படங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று கூறும் அக்ஷய், அப்போது வேறு ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று வேலை பார்க்கவேண்டும் என்று எண்ணினேன் என்கிறார்.
Photo: Varinder Chawla
தன்னுடைய நண்பர் ஒருவர் கனடாவிலிருப்பதாகக் கூறும் அக்ஷய், இந்தியாவில் உன்னால் வெற்றிபெறமுடியவில்லையானால் கனடாவுக்கு வந்துவிடு என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கிறார்.
ஏராளம் பேர் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்ய செல்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இன்னமும் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, என் தலைவிதி எனக்கு இந்தியாவில் உதவி செய்யவில்லையானால், நான் வேறு ஏதாவதுதான் செய்யவேண்டும் என்று எண்ணிய நான் கனடாவுக்குச் சென்றேன். கனடாவுக்குச் சென்று குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், கனேடிய குடியுரிமையும் கிடைத்தது என்கிறார் அக்ஷய்.
ஆனால், அதற்குப் பிறகு தொழிலில் வெற்றியை அனுபவிக்கத் துவங்கியதாக தெரிவிக்கும் அக்ஷய், இந்தியாவிலேயே இருந்துவிடுவது என முடிவு செய்ததாகத் தெரிவிக்கிறார்.
அதற்குப் பிறகு நான் கனடாவுக்குச் செல்வது குறித்து நினைத்துப்பார்க்கவில்லை என்கிறார் அவர்.
தனக்கு கனேடிய பாஸ்போர்ட் உள்ளது உண்மைதான் என்று கூறும் அக்ஷய், ஆனால், நான் இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன் என்கிறார்.
என்னைப் பற்றி பலர் பலவிதமாக பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றுதான் சொல்லுவேன், நான் ஒரு இந்தியன், இந்தியனாகத்தான் இருப்பேன் என்பதுதான் அது என்கிறார்.
நான் ஒரு இந்தியன். ஆனால், நான் ஒரு இந்தியன் என நிரூபிக்கவேண்டியிருப்பதுதான் எனக்கு வேதனையை உண்டாக்குகிறது என்கிறார் அக்ஷய்.