தீவிபத்துக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயம்
தீப்பற்றி எரிந்த பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், டிசம்பர் மாதம் அந்த தேவாலயம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
தீப்பற்றி எரிந்த பிரான்சிலுள்ள நாட்ரிடாம் தேவாலயம்
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிவதைக் கண்டு, பாரீஸ் நகர மக்களுடன், அந்த பயங்கரக் காட்சியை தொலைக்காட்சியில் கண்ட உலகமும் பதறியது.
தீப்பற்றி எரிந்த தேவாலயத்தை ஐந்து ஆண்டுகளில், மீண்டும் முன்னை விட அழகாக கட்டி எழுப்புவதாக உறுதியளித்திருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
இந்நிலையில், தற்போது தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.
Nous y sommes. pic.twitter.com/oBjrTpuvFZ
— Emmanuel Macron (@EmmanuelMacron) November 29, 2024
தேவாலயத்தை பார்வையிடும் மேக்ரான்
தேவாலயப் பணி நிறைவடைந்ததையடுத்து, இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தேவாலயத்தை பார்வையிட உள்ளார்.
அந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளதால், தேவாலயத்தைக் காணும் வாய்ப்பு பொதுமக்களுக்கும் கிடைக்க உள்ளது.
தீப்பிடித்த தேவாலயத்தை மறுசீரமைக்க சுமார் 250 நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான நிபுணர்கள் இணைந்து பணியாற்றியதுடன், பல மில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டது.
தேவாலயப் பணியில் ஈடுபட்ட 2,000 பணியாளர்களுக்கும் இன்றைய நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவருடைய சேவைக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இன்றைய நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
தேவாலயம் திறக்கப்படுவது எப்போது?
அடுத்த மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 7ஆம் திகதி, தேவாலய திறப்புவிழாவையொட்டி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தேவாலயத்திலிருந்து உரையாற்ற இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மறுநாள், அதாவது டிசம்பர் மாதம் 8ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, தேவாலயத்தின் முதல் ஆராதனை நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |