தமிழ் திரையுலகில் கொரோனாவுக்கு அடுத்த பலி! பிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு
பிரபல மூத்த நகைச்சுவை நடிகர் வீரமணி தனது 71வது வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமா பிரபலங்கள் கொரோனாவால் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடிகர்கள் பாண்டு, நிதிஷ் வீரா, மாறன், இயக்குனர்கள் கே.வி ஆனந்த், தாமிரா ஆகியோர் பெருந்தொற்றுக்கு பலியானார்கள்
அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகர் வீரமணி நேற்று உயிரிழந்துள்ளார்.
தமிழில் பத்ரகாளி, சின்ன பூவே, பொண்ணு வீட்டுக்காரன், தங்கமான ராசா உள்பட ஏராளமான படங்களில் வீரமணி நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் நாகேஷுக்கு டூப்பாக பல படங்களில் நடித்துள்ளதோடு, பல குணச்சித்திர நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.
சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த வீரமணிக்கு நேற்று காலை திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவமனையில் சேர்ந்த உடனேயே அவர் உயிர் பிரிந்தது. வீரமணிக்கு நாகரத்தினம் என்ற மனைவி, கவிதா சண்முகப்பிரியா, பவித்ரா என்ற மகள்கள் உள்ளனர்.
வீரமணியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.