10 ஆயிரம் பாம்புகளை துணிச்சலுடன் பிடித்துள்ள தமிழருக்கு தற்போது நேர்ந்த கதி! பல்வேறு தரப்பினர் இரங்கல்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ள பாம்புபிடிப்பதில் வல்லவரான ஸ்டான்லி பெர்னாண்டஸ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் உள்ள அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சார்ந்தவர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் (62).
இவர் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தனது சிறு வயதில் இருந்து ஸ்டான்லி பாம்பு பிடிக்கும் நிபுணராக இருந்து வந்துள்ளார்.
கடந்த 25 வருடத்திற்கும் மேல் பல வீடுகளில் புகுந்த பாம்புகளை பிடித்து காட்டிற்குள் விட்டு இருக்கிறார்.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்துகொள்ளும் நல்லபாம்பு உட்பட அனைத்து பாம்புகளையும், எந்த விதமான பயமும் இன்றி இலாவகமாக பிடித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் காடுகளில் விட்டு வந்துள்ளார்.
இவரை பல முறை பாம்பு கடித்துள்ளது, மேலும் ஒரு முறை கோமா நிலைக்கு சென்று உயிர் பிழைத்தார்.
மேலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை எந்த பணமும் வாங்காமல் பிடித்து பொதுமக்களுக்கு சேவை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்டான்லி பெர்னாண்டஸ், அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.