சின்னசாமி மைதானத்தில் கோலிக்கு கிடைக்க உள்ள கௌரவம் - ரசிகர்கள் செய்யபோவது இதுதான்
சின்னசாமி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியின் போது, விராட் கோலியை RCB ரசிகர்கள் கௌரவிக்க உள்ளனர்.
RCB vs KKR
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற உள்ள போட்டியில், RCB மற்றும் KKR அணிகள் மோத உள்ளது.
ஐபிஎல் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக தங்களது நாடுகளுக்கு திரும்பிய டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்டு, ஜேக்கோப் பெத்தேல், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் பில் சால்ட் ஆகியோர் மீண்டும் RCB அணியுடன் இணைந்துள்ளனர்.
அணித்தலைவர் ரஜத் படிதாருக்கு விரலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாகி வருவதால், இந்த போட்டியில் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விராட் கோலிக்கு கௌரவம்
அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அதேவேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணித்தலைவராக இந்திய அணிக்கு பல பெருமைகளை பெற்றுக்கொடுத்த விராட் கோலிக்கு முறையான ஃபேர்வல் இல்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நாளை நடக்கும் போட்டியில், கோலியை கௌரவப்படுத்த RCB ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, வழக்கமான RCB அணியின் ஜெர்சியை அணிந்து வராமல், 18 ஆம் எண் பொறித்த இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்திற்கு வர முடிவு செய்துள்ளனர்.
இதற்காக RCB ரசிகர்கள் சிலர் நிதி திரட்டி வருகின்றனர். மேலும் சிலர், அதிகளவிலான ஜெர்சிக்களை வாங்கி ஜெர்ஸி இல்லாமல் வருபவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
அதேவேளையில் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருவதால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |