தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்... பிரான்சில் வெடித்த ஆர்ப்பாட்டம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் தீவிர வலதுசாரிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெடித்ததை அடுத்து பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டம்
பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான National Rally ஞாயிறன்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் 32 சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை குவித்துள்ளது. ஆனால் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் Renaissance கட்சி வெறும் 14.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதுடன், தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதும் காணொளியாக வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரில் திரண்ட மக்கள் National Rally கட்சியின் Marine Le Pen-க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.
நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள்
இதனிடையே, பிரான்ஸ் மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்றால் ஆட்சியை கைப்பற்ற நாங்கள் தயார் என்று Marine Le Pen அறிவித்துள்ளார். பிரான்ஸ் மட்டுமின்றி, பெல்ஜியம், ஜேர்மனி, மற்றும் ஆஸ்திரியாவிலும் தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலானது 2019க்கு பின்னர் முதல்முறையாக முன்னெடுக்கப்படுகிறது. மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த தேர்தலானது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னர் நடக்கும் முதல் தேர்தல்,
அத்துடன் கொரோனா பெருந்தொற்றிற்கு பின்னர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தலாகும். விலைவாசி உயர்வு, இடம்பெயர்தல் தொடர்பான கவலைகள், புவிசார் அரசியல் பதட்டங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |