பிரித்தானியாவில் ஆசிய நாட்டவரை சுற்றிவளைத்து தாக்கிய தீவிர வலதுசாரிகள்
பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஆசிய நாட்டவர் ஒருவர் அவர்களிடம் சிக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தரக்குறைவாக திட்டிவிட்டு
குறித்த ஆசிய நாட்டவரை அவரது காரில் இருந்து இழுத்து வெளியேற்றி, தரக்குறைவாக திட்டிவிட்டு காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த வார இறுதியில் இதுவரை நூற்றுக்கணக்கான கலவரங்கள் மான்செஸ்டர், லிவர்பூல், ஹல், பிரிஸ்டல், பிளாக்பூல் மற்றும் பெல்ஃபாஸ்ட் பகுதி முழுவதும் பரவியுள்ளதுடன், அப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை உயிருக்கு பயந்து ஓட வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமூக ஊடக பக்கத்தில் வெளியான காணொளி ஒன்றில், ஹல் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றை சுற்றிவளைத்த கலவரக்காரர்கள், அந்த சாரதியை தரக்குறைவாக திட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, அவரை காருக்குள் இருந்து இழுத்து வெளியேற்றி, காரை அடித்து நொறுக்கியுள்ளனர். அந்த குழுவில் ஒருவர், வாருங்கள் நண்பர்களே, அடித்து நொறுக்குவோம் என அழைப்பு விடுப்பதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மூன்று சிறுமிகள்
பலர் அந்த சாரதி வெளிநாட்டவர் என கத்துவதும், சிலர் பொலிசாரின் உதவி கோருவதும் கேட்க முடிகிறது. இந்த நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து வந்ததும், அந்த குழு பல திசையிலும் சிதறியுள்ளது.
கடந்த திங்களன்று மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே தீவிர வலதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதல்தாரி இஸ்லாமியர் என சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவலை அடுத்து, மசூதிகள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் தாக்குதல்தாரியும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டும், இதுவரை கலவரம் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |