சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஹனா திரைப்படம்: காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு
தமிழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஃபர்ஹனா திரைப்படத்திற்கு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளியான திரைப்படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஃபர்ஹனா என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
@youtube
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் இஸ்லாமிய சமூகத்தை பற்றி, தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஃப்ர்ஹனா படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஃப்ர்ஹனா படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதாக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஃப்ர்ஹனா படத்தின் காட்சிகள் ரத்து
இந்த படத்தின் ட்ரெய்லரில் சில காட்சிகள் இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் ஃபர்ஹனா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
@youtube
இதனால் ஃபர்ஹனா படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகத் திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் ஒரு திரையரங்கில் தான் இந்த படம் வெளியானது. தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபர்ஹனா படத்தின் கதை
ஃபர்ஹனா என்ற சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த இஸ்லாமிய பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரோடு எளிமையான வாழ்வை வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஒரு கால் சென்டர் நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் அவள், அது ஒரு ஆபாச உரையாடல்களை நிகழ்த்தும் கால் சென்டர் நிறுவனம் என பின்னர் தான் தெரிந்து கொள்கிறார்.
குடும்ப சூழல் காரணமாக அங்கு பணிபுரியும் ஃபர்ஹனா நிறைய ஆண்களோடு போன் உரையாடலில் பேச வேண்டிய சூழல் உண்டாகிறது.
சக பெண்களை உணர்வு ரீதியாக மதிக்க தெரியாத ஆண்களின் சல்லித் தனத்தையும், ஃபர்ஹனாவுடன் உரையாடலில் ஈடுபடும் செல்வராகவனால் உண்டாகும் பிரச்சனையை எவ்வாறு அவள் எதிர் கொள்கிறாள் என்பதே மீதிக் கதை.
இக்கதை முழுக்க நடுத்தர குடும்பத்து இஸ்லாமியர்களின் வாழ்வை சித்தரிப்பதாகவும், ஒரு பெண் சமூகத்தால் எதிர்கொள்ளும் அக சிக்கல்களையும், அதில் அவள் எப்படி மீண்டால் என பதட்டத்தோடு விவரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரில்லர் வகையறா படம் என தமிழ் சினிமா விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.
மேலும் இதில் எந்த இடத்திலும் இஸ்லாம் சமூகத்தை இழிவுபடுத்தவில்லை எனவும், மார்க்கத்தின் பால் அப்பெண் கொண்டுள்ள பற்றை தான் இப்படம் விவரிக்கிறது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.