முகமூடியர்கள் குறித்து விவசாயியின் 999 அவசர அழைப்பு: முறியடிக்கப்பட்ட RAF ஃபேர்போர்ட் சதி
Farmer’s 999 Alert RAF Fairford Plot Thwarts: விவசாயி ஒருவரின் அவசர அழைப்பை தொடர்ந்து RAF ஃபேர்போர்ட் தளத்தில் திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள வெல்ஃபோர்ட்(Welford) கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் பறக்க பிரித்தானியா அனுமதிக்க கூடாது என்று ஈரான் பகிரங்மாக எச்சரிக்கை விட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்குரிய இந்த பயங்கரவாத செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்காணிக்க அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்மட்ட உளவுத்துறை கண்காணிப்புகள் இருந்த போதிலும், உள்ளூர் விவசாயி ஒருவரின் உடனடி விழிப்புணர்வும் அவசர அழைப்பும் தான் மிகப்பெரிய சதி திட்டத்தை முறியடிக்க முக்கியமாக காரணமாக அமைந்துள்ளது.
விவசாயி ஒருவரின் அவசர அழைப்பு
RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் முகமூடி மற்றும் ஹூடி அணிந்திருந்த குழுவினரை விவசாயி ஒருவர் பார்த்துள்ளார்.

விவசாயியை பார்த்ததும் அந்த கும்பல் சிதறி ஓடி அருகில் இருந்த கிராமத்திற்கு உள்ளேயும் வயல்களிலும் புகுந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு விவசாயி அழைப்பு விடுத்த நிலையில் அது எடுக்கப்படவில்லை.
உடனே அந்த விவசாயி 999 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளார்.
விவசாயி தகவல் வழங்கிய 10 வது நிமிடத்தில் கிராமம் முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல் துறை குவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
தன்னுடைய விரைவான 999 அவசர அழைப்பு சந்தேக நபர்களின் திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக விவசாயி குறிப்பிட்டுள்ளார்.