இந்திய வம்சாவளியினராக இருந்துகொண்டு இந்தியாவையே தாக்கிப்பேசிய பிரித்தானிய உள்துறைச் செயலரின் கதி...
இந்திய வம்சாவளியினராக இருந்துகொண்டு புலம்பெயர்தலைக் கடுமையாக்க அரும்பாடு பட்டார் முந்தைய பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
அவரைத் தொடர்ந்து வந்த இந்திய வம்சாவளியினரான சுவெல்லா பிரேவர்மேனும் இந்தியாவைத் தாக்கிப் பேசினார்.
தனது பதவியை ராஜினாமா செய்துள்ள உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் இந்தியாவைக் குறித்து பேசிய விடயங்களை மறக்காமல் நினைவுகூர்ந்துள்ளன ஊடகங்கள்...
ஒவ்வொரு முறை ஒரு இந்திய வம்சாவளியினர் முக்கிய பதவி ஒன்றிற்காக தேர்ந்தெடுக்கப்படும்போதும், இந்திய ஊடகங்கள் அவர்களைக் கொண்டாடின.
ஆனால், பதவிக்கு வந்ததும், அவர்கள் தாங்கள் இப்போது வாழும் நாட்டின் மீதும், தாங்கள் வகிக்கும் பதவியின் மீதும் உண்மையாக இருப்பதாக காட்டுவதற்காக இந்தியாவை குறைகூறத் துவங்கிவிடுவது வாடிக்கையாகிவிட்டது.
தற்போது ராஜினாமா செய்துள்ள சுவெல்லாவைப் பொருத்தவரை, அவரது தாய் இந்து தமிழ் பின்னணிகொண்டவர், தந்தை கோவா பின்னணி கொண்டவர்.
ஆனால், சுவெல்லா பதவியேற்றதும், காலனி ஆதிக்கத்துக்கு ஆதரவாகவும் புலம்பெயர்தலுக்கு எதிராகவும் கடினமாக பேசினார்.
சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது வன்முறை வெடித்த நிலையில், கட்டுப்பாடற்ற புலம்பெயர்தல்தான் அதற்குக் காரணம் என்றும், புதிதாக பிரித்தானியாவுக்கு வருவோர் பிரித்தானியர்களிடன் ஒருங்கிணைந்து வாழ்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார் சுவெல்லா.
எல்லாம் போக, இப்போது ராஜினாமா செய்யும்போது கூட, தான் பிரித்தானியாவுக்கு உண்மையாக இருப்பதைக் காட்டுவதற்காக, நாம் மொத்த புலம்பெயர்தலையும் கட்டுப்படுத்துவோம், சட்ட விரோத புலம்பெயர்தலை நிறுத்துவோம் என பிரித்தானிய வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் அளித்தோம், நான் நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம் என்று பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸையே குறைகூறிச் சென்றுள்ளார் சுவெல்லா.
ஆனாலும், சுவெல்லா ராஜினாமா செய்ததும், இந்தியாவுக்கும் புலம்பெயர்தலுக்கும் விரோதமாக அவர் பேசியதை ஊடகங்கள் மறக்காமல் நினைவுகூர்ந்துள்ளன!