அவுஸ்திரேலியாவில் சுறா மீன் கடித்து 38 வயதுடைய நபர் உயிரிழப்பு: சம்பவத்தின் பின்னணி
அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுறா மீன் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரபலமான ராட்னெஸ்ட் தீவு அருகே சுறா மீன் கடித்ததில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெர்த் நகரில் இருந்து கிட்டத்தட்ட 31 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள ஹார்ஸ்ஷூ ரீஃப்(Horseshoe Reef) என்ற பகுதியில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.

என்ன நடந்தது?
உயிரிழந்த நபர் கடலில் தன்னுடைய நண்பருடன் இணைந்து மீன் பிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ராட்சத சுறா மீன் ஒன்று அவரை தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு உடனடியாக கரைக்கு இழுத்து வரப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
காலை 10 மணியளவில் கிட்டத்தட்ட 4 மீட்டர் நீளம் கொண்ட சுறா மீன் பாதிக்கப்பட்ட நபரை கடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சுறா மீன் கடலில் இருந்து வெறும் 80 மீட்டர் தொலைவில் தென்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சுறா மீன் தாக்குதலை அடுத்து இந்த ஆண்டின் இரண்டாவது உயிரிழப்பாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நிகோ ஆன்டிக் என்ற 12 வயது சிறுவன் சிட்னி துறைமுகப் பகுதியில் நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்த போது சுறா மீன் கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |