கனடாவில் 7 வயது மகளுடன் மாயமான தந்தை: விடுக்கப்பட்ட கோரிக்கை
கனடாவின் வான்கூவர் தீவில் தங்கள் வீட்டில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் தந்தை மற்றும் 7 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.
வான்கூவர் தீவில் ஞாயிறன்று குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கோவிச்சன் மற்றும் டங்கன் பகுதியில் வசிக்கின்ற ஜெஸ்ஸி பென்னட் மற்றும் ஏழு வயது வயலட் பென்னட் ஆகியோரை குடும்ப உறுப்பினர்களால் அணுக முடியவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் அளித்திருந்த ஒப்புதலின்படி ஜனவரி 20ம் திகதி சிறுமி வயலட் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், இன்றுவரையில், காவல்துறை மற்றும் குடும்பத்தினர் ஆகியோரால் ஜெஸ்ஸி அல்லது வயலட் பென்னட் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றே பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஜெஸ்ஸி பென்னட் பொலிஸைத் தீவிரமாக புறக்கணிக்கிறார் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும் நாங்கள் நம்புகிறோம், அவர் வயலட்டைத் தன் தாயிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே முறையான நடவடிக்கை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள், பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.