பயங்கரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தந்தையும் மகளும்: ஒரு வயலினுக்காக நடந்த கொடூர சம்பவம்
பராகுவே நாட்டில் ஒரு தந்தையும் மகளும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மூன்று ஜேர்மானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பராகுவே நாட்டிலுள்ள Aregua என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில், Bernard von Bredow (62) என்ற தொல்பொருள் ஆய்வாளரும், அவரது மகளான, Loreena (14) என்ற இளம்பெண்ணும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் தாறுமாறாக கிடந்தன.
Mr Von Bredow, சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Loreena குளியலறையில், குளிக்கும் தொட்டியில் வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இவ்வளவுக்கும் அந்த வீட்டிலிருந்த வயலின்கள் காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வயலின்களுக்காக இப்படி இரண்டு கொடூரக் கொலைகளா என்றால், அந்த வயலின்கள் சாதாரண வயலின்கள் அல்ல. Stradivarius வயலின் என்று அழைக்கப்படும் அந்த வயலின்கள், பல மில்லியன் டொலர்கள் வரை விலைபோகக்கூடியவை. 2011ஆம் ஆண்டு, ஒரு Stradivarius வயலின், லண்டனில் 13.1 மில்லியன் டொலர்களுக்கு விலை போயிற்று.
இந்த கொள்ளைக்காரர்கள் வயலின்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு விலையுயர்ந்த அந்த அபூர்வ வயலின்களை அவர்களால் எளிதாக விற்க முடியாது.
அவற்றிற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் இருந்தால்தான் அவற்றை விற்க முடியும். இல்லையென்றால், சிக்கிக்கொள்வோம் என்பதை நன்கு அறிந்திருந்ததால், அவர்கள் அந்த சான்றிதழ்கள் எங்கே இருக்கின்றன என்று கேட்டு Mr Von Bredowவை சித்திரவதை செய்திருக்கலாம் என்றும், அந்த சான்றிதழ்களைத் தேடியதாலேயே அந்த வீட்டிலுள்ள பொருட்கள் தாறுமாறாகக் கிடந்ததாகவும் பொலிசார் கருதுகிறார்கள்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, Volker Grannass (58), Yves Asriel Spartacus Steinmetz (60) மற்றும் Stephen Jorg Messing Darchinger (51) என்னும் மூன்று ஜேர்மானியர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.