விமான விபத்தில் சிதைந்த குடும்பம்: கணவர், மகன்களை இழந்த பெண் சோக பதிவு
Family of three died in plane crash: அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்தில் கணவர், மகங்களை பறிகொடுத்த பெண் உருக்கமான அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மலைப்பகுதியில் சிறிய விமான விபத்து ஏற்பட்டதில், தந்தை மற்றும் 13,15 வயது மகன்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் உருக்கமான அஞ்சலியை பகிர்ந்துள்ளனர்.
கொலராடோ மலைப்பகுதியில்
அமெரிக்காவின் கார்ஃபீல்ட் கவுண்டியில் உள்ள நியூ கேஸில் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் ஹெண்ட்ரிக்சன் (46).
இவர் சனிக்கிழமையன்று, கொலராடோ மலைப்பகுதியில் உள்ள Gunnison தேசிய வனப்பகுதியின் Swampy Pass அருகே, சிறிய ரக விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் 15 வயது மகன் ஆலன் மற்றும் 13 வயது மகன் கேஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக விமானம் விபத்திற்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர். Gunnison கவுண்டி அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கணவர், மகன்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நிலைகுலைந்த மார்க்கின் மனைவி ஜென்னி, சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
உருக்கமான பதிவு
அவரது பதிவில், "இத்தகைய வார்த்தைகளை நான் எழுத வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. என் வாழ்வின் அன்புக்குரியவர்களும், எங்கள் அழகான இரு மகன்களுமான ஆலன் மற்றும் கேஸ் ஆகியோர் நேற்று நடந்த விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இந்த துயரமான விபத்து எங்கள் குடும்பத்தின் உலகம் சிதைந்துவிட்டது.
கோயனுக்கும் (மற்றொரு மகன்) எனக்கும் நிறைய அன்பு கிடைத்துள்ளது. அந்த அன்பை நாங்கள் உணர்கிறோம்; வரும் நீண்ட காலத்திற்கு எங்களுக்கு அந்த அன்பு தேவைப்படும்" என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹெண்ட்ரிக்சன் எந்த வகையான விமானத்தை ஓட்டிச் சென்றார்? எங்கு சென்று கொண்டிருந்தார்? அல்லது அவரது விமானம் கீழே விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த விபத்து குறித்து Gunnison ஷெரிப் அலுவலகம், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், FAA மற்றும் அமெரிக்க வனத்துறை ஆகியவற்றால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
