பிரித்தானிய இளம்பெண் கொலை வழக்கு... பாகிஸ்தான் பிரதமருக்கு தந்தை விடுத்துள்ள நெகிழ்ச்சி கோரிக்கை
பாகிஸ்தானில் பிரித்தானிய இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், கொலைகாரர்களை பிடிக்க உதவுமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு அந்த பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவரான Mayra Zulfiqar (24), தன் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் வந்திருந்தார். இப்போதைக்கு லண்டன் திரும்பினால், தனிமைப்படுத்தலுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று எண்ணி பாகிஸ்தானிலேயே தங்கியிருந்த Mayra, ஒரு நாள் தான் தங்கியிருந்த வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மேற்கு லண்டனிலுள்ள Felthamஐச் சேர்ந்த Mayra எதனால் கொல்லப்பட்டார் என்பது இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்தக் கொலையின் பின்னணியில் ஒரு முக்கோணக் காதல் இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
Mayra, Saad Ameer Butt (29) மற்றும் Zahir Jadoon என்னும் இருவருடன் நட்பாக பழகியுள்ளார். ஆனால், அவர் Zahirஐ காதலித்ததாக கருதப்படுகிறது. காரணம், Zahir, தானும் Mayraவும் தங்குவதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டில்தான் Mayra சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில் Mayra, Zahirஐக் காதலிப்பது தெரிந்தும் Saad அவரிடம் தன் காதலை தெரிவித்திருக்கிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
Saadஐ பொலிசார் கைது செய்துள்ள நிலையில், பல மணி நேரம் அவரை விசாரித்தும், வழக்குக்கு பிரயோஜனமான எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். Zahir தலைமறைவாகிவிட்டதால், அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு, அவர் ஏன் தலைமறைவானார் என்பது போன்ற விடயங்கள் தெரியவரவில்லை. அவர் சிக்கினால் மட்டுமே, வழக்கில் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என கருதப்படுகிறது.
இதற்கிடையில், தன் மகளுடைய இறுதிச்சடங்குக்காக லண்டனிலிருந்து பாகிஸ்தான் விரைந்துள்ள Mayraவின் தந்தையான Mohammad Zulfiqar, தன் மகளைக் கொன்றவனை பிடிக்க உதவுமாறு பாகிஸ்தான் பிரதமரை வேண்டிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
என் மகள் பாகிஸ்தானுக்காக எதையாவது செய்யவேண்டுமென்ற ஆசையில் இருந்தாள், பிரதமர் இம்ரான்கான் அவர்களே, அவள் உங்களுக்கும் மகள்தானே, அவளைக் கொன்றவர்களை பிடிக்க உதவுங்கள் என்று நெஞ்சுருக கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.