புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்ந்துவரும் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களையும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளார் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.
இந்நிலையில், ஸ்டார்மரின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பல சலுகைகளைக் கேட்பதில் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் உள்துறை அமைச்சரான பிரீத்தி பட்டேல்.
இந்த ஒப்பந்தத்தால், பிரித்தானிய இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் வேலை கிடைப்பதிலேயே பிரச்சினைகள் ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், முன்னாள் கேபினட் அமைச்சரான எஸ்தர் (Esther McVey) என்பவரும், இதே கருத்தை ஆமோதித்துள்ளார்.
ஸ்டார்மரின் இந்த ஒப்பந்தம் இளம் பிரித்தானியர்களுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள அவர், பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள் 14.2 சதவிகிதம் குறைந்துள்ளன. ஐரோப்பா முழுவதும், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல்லிலும் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது என்கிறார்.
ஆக, ஸ்டார்மரின் ’youth mobility scheme’, அதாவது, ஐரோப்பிய ஒன்றிய இளைஞர்களை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கும் திட்டம், வேலை இல்லாத ஐரோப்பிய இளைஞர்களை பிரித்தானியாவுக்கு வரத் தூண்டும் என்கிறார் அவர்.
அதுமட்டுமின்றி, youth mobility திட்டத்தை காரணமாக வைத்து, ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பல கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, ஐரோப்பிய ஒன்றிய இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் படிக்கவும், வேலை செய்யவும், வாழவும், அனுமதியளிக்கப்படும் நிலையில், அவர்கள் தங்கள் உறவினர்களையும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பு விரும்புவதே இந்த அச்சத்துக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |