பிரான்ஸ் அருங்காட்சியக கொள்ளை: புகைப்படத்தால் ஒரே நாளில் பிரபலமான இளைஞர்
பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த அன்று அருங்காட்சியகத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றால், ஒரு இளைஞர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.
புகைப்படத்தால் ஒரே நாளில் பிரபலமான இளைஞர்
பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நாளில், அருங்காட்சியகத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

அதற்குக் காரணம், அந்த புகைப்படத்தில் 15 வயது இளைஞர் ஒருவர், 1940களில் அணியும் உடை மற்றும் தொப்பி அணிந்தபடி காட்சி தருவதுதான்.
அந்த புகைப்படத்தை AP ஊடக புகைப்படக் கலைஞரான Thibault Camus என்பவர் படம் பிடித்திருந்தார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக, யார் இந்த நபர், ஒருவேளை துப்பறிவாளராக இருப்பாரோ என்று வியந்து அவருக்கு Fedora man என பெயரும் வைத்துவிட்டனர் இணையவாசிகள்.
இந்த Fedora என்பது 1882ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரபல நாடகம். அந்த நாடகத்தின் நாயகி அணிந்திருந்த தொப்பி Fedora தொப்பி என அழைக்கப்படுகிறது.
சில கதைகளில் வரும் துப்பறிவாளர்கள் இதேபோன்ற தொப்பிகளை அணிவதுண்டு. ஆகவேதான், இவர் அவராக இருப்பாரா என சிலரும், இது AI என சிலரும் பேச, அந்த புகைப்படம் பிரபலமாகிவிட்டது.
உண்மை என்னவென்றால், அந்த புகைப்படத்தில் இருப்பவர், பெட்ரோ எலியாஸ் (Pedro Elias Garzon Delvaux, 15) என்னும் இளைஞர்.

பிரான்சிலுள்ள Rambouillet என்னுமிடத்தைச் சேர்ந்த பெட்ரோ, தன் தாயுடன் Louvre அருங்காட்சியகத்துக்குச் சென்றுள்ளார்.
ஆனால், அவர்களை பொலிசார் உள்ளே விடவில்லையாம். அப்போதுதான் அங்கு ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது குறித்து அவர்கள் அறிந்துகொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பெட்ரோவை அழைத்த அவரது தோழி ஒருவர் இந்த புகைப்படத்தை சுட்டிக் காட்டி, அது நீயா என கேட்டுள்ளார்.
அது ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என்று அவர் கூற, அப்போதுதான் பெட்ரோவுக்கு அந்த புகைப்படம் பிரபலமான விடயமே தெரிந்துள்ளது.
தற்போது, அந்த புகைப்படத்திலிருப்பது தான்தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் பெட்ரோ.
துப்பறிவாளர்கள் மீது ஆர்வம் கொண்ட தான், 20ஆம் நூற்றாண்டு கால கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றைப் பார்த்து அதிலிருந்த ஒருவரால் ஈர்க்கப்பட்டு அவரைப்போல் உடை அணியத் துவங்கியதாகத் தெரிவிக்கிறார் பெட்ரோ.

இதற்கிடையில், மக்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து தான் யார் என கண்டுபிடிக்க முயன்றதாகவும், ஊடகவியலாளர்கள் தன்னைத் தேடிவந்தபோது தான் தன்னை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் தன் வயதைக் கேட்டு வியப்படைந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.
விரைவில் தன்னை திரைப்படங்களில் நடிக்கவைப்பதற்காக திரைத்துறையினர் தேடிவந்தாலும் வரலாம் என்கிறார் பெட்ரோ வேடிக்கையாக!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |