பாதுகாப்பாக உணர்கிறோம்: கனடாவில் வாழும் இந்திய மாணவர்கள்...
கனடாவிலுள்ள மில்ட்டன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கனடாவில் தங்கியிருக்கும் மாணவர்கள் கவனமாக இருக்குமாறு இந்திய அரசு ஆலோசனை அளித்துள்ளது.
சமீபத்தில், கனடாவில் இந்திய மாணவர் சத்விந்தர் சிங் (28) கொல்லப்பட்ட நிலையில், இந்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம், கனடாவில் இனவெறுப்புக் குற்றங்கள் முதலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகவும், அதனால், மாணவர்கள் கவனமாக இருக்குமாறும், எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும் கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் ஆலோசனை அளித்திருந்தது.
தெற்கு ஒன்ராறியோவிலுள்ள மில்ட்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட சிங், தன் கல்விப்படிப்பை முடித்துவிட்டு, பகுதி நேரப்பணியாற்றிகொண்டிருந்தார்.
இந்திய அரசு அளித்த ஆலோசனையைத் தொடர்ந்து, தாங்கள் கனடாவில் பாதுகாப்பாக உணர்வதாக பல மாணவர்கள் தெரிவித்துள்ள அதே நேரத்தில், இந்திய அரசின் ஆலோசனை மிகவும் பாராட்டத்தக்கதென்றும், அது மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
Express photo by Gajendra Yadav/Representative Image
கியூபெக்கில் கல்வி பயில்வதற்காக தங்கியிருக்கும் இந்திய மாணவரான தில்ப்ரீத் சிங், பல மாணவர்களுக்கு, தாங்கள் உயர் ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற விடயமோ, அவசர நேரத்தில் கனடாவிலுள்ள தூதரகத்தை தொடர்புகொள்ளவேண்டும் என்பதோ தெரிந்திருக்கவில்லை என்கிறார்.
ஹர்மன்பீர் சிங் என்னும் மாணவரோ, தங்களைக் குறித்து தங்கள் நாடு கரிச்னை கொண்டுள்ளது என்பதை உறுதி செய்வதாக இந்திய அரசின் ஆலோசனை உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
ஒருபக்கம் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் அதேநேரத்தில், இன்னொருபக்கம், இந்திய மாணவர்களும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்த சம்பவங்களும் நடந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.