தாலிபான்களுக்கு அஞ்சி... பிரித்தானியாவில் ஆப்கான் அகதிச்சிறுவனின் பரிதாப மரணம்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களுக்கு அஞ்சி, பிரித்தானியாவுக்கு தப்பி வந்த சில நாட்களில் ஹொட்டல் அறையில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் ஆட்சி அதிகாரங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அப்பாவி மக்கள் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து, உயிரை பணயம் வைத்து நாட்டைவிட்டு தப்பி வருகின்றனர். இந்த நிலையில், குடும்பத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா திரும்பிய 5 வயது சிறுவன் தெற்கு யார்க்ஷயர், ஷெஃபீல்ட் பெருநகர ஹொட்டலில் தங்க வைக்கப்பட்ட நிலையில், நேற்று சுமார் 2.30 மணியளவில் 9வது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளது மொத்த குடும்பத்தாரையும் உலுக்கியுள்ளது.
மரணமடைந்த சிறுவனின் குடும்பமானது ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ராணுவம் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், தாலிபான்கள் தற்போது நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களும் பிரித்தானியாவுக்கு தப்பி வந்துள்ளனர்.
காபூல் நகரில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் குறித்த சிறுவனின் தந்தை பணியாற்றி வந்துள்ளதாக கூறப்படுகி்றது. முதற்கட்ட விசாரணையில், குறித்த சிறுவனின் மரணத்தில் ஏதும் மர்மம் இல்லை எனவும், சிறுவன் தவறி விழுந்த 9வது மாடியின் ஜன்னலில் இடைவெளி இருந்ததையும் உறுதி செய்துள்ளனர்.
தாலிபான்களுக்கு பயந்து பிரித்தானியாவுக்கு தப்பி வந்த நிலையில், தற்போது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம், மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.