இலங்கை ஆப்கானிஸ்தான் நாடுகளில் பணி புரிந்த கனேடிய இராணுவ வீரருக்காக சக வீரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளில் முகாமிட்டிருந்த கனேடிய இராணுவ பிரிவுகளில் பணிபுரிந்தவர் Pte. Jesse Larochelle.
கனேடிய இராணுவத்தினர் 2006ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்தபோது, Larochelleக்கு 20 வயது மட்டுமே.
கனேடிய இராணுவ வீரர்கள் சிலர் முகாமிட்டிருந்த இடத்தை சுற்றி வளைத்து, மூன்று பக்கங்களிலிருந்து சுமார் 20 தாலிபான்கள் தாக்குதல் நடத்த, கனேடிய வீரர்கள் அவர்களை எதிர்த்து தாக்கியிருக்கிறார்கள். ஆனால், ராக்கெட் மூலம் வீசப்பட்ட குண்டு ஒன்று வெடித்து கனேடிய வீரர்கள் அனைவரும் மயங்கி விழுந்துவிட்டிருக்கிறார்கள்.
Larochelleக்கு மயக்கம் தெளிந்தபோது, தனது சக வீரர்கள் இருவர் உயிரிழந்துவிட்டதையும், நான்கு பேர் காயமடைந்து கிடப்பதையும் கண்டிருக்கிறார். தனக்கும் காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும், மீண்டும் தாலிபான்களைத் தாக்க முயன்றபோது, தங்கள் இயந்திரத் துப்பாக்கிகள் வெடிகுண்டு வீச்சில் நாசமாகி விட்டதைக் கண்டுள்ளார் அவர்.
இருந்தாலும், தங்களிடம் 15 ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பதை கவனித்த Larochelle, அவற்றைக் கொண்டு தாலிபான்களை சரமாரியாகத் தாக்க, தாலிபான்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்திருக்கிறார்கள்.
இறந்த தன் சக வீரர்களின் உடல்களையும், காயமடைந்த தன் சக வீரர்களையும் விமானத்தில் ஏற்ற உதவிவிட்டு, பிறகுதான் தனக்கு மருத்துவ சிகிச்சை செய்ய அனுமதித்திருக்கிறார் Larochelle. மருத்துவர்கள் அவரது முதுகெலும்பு உடைந்துள்ளதையும், அதையும் தாங்கிக்கொண்டு அவர் ராக்கெட் லாஞ்சர்களை இயக்கியதால், மேலும் காயம் அதிகமாகியுள்ளதையும் கண்டு அவருக்கு சிகிச்சையளித்துள்ளர்கள்.
பின்னர் குணமடைந்த Larochelle வீடு திரும்பியபின், அவருக்கு இராணுவத்தின் Star of Military Valour என்னும் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Larochelle தன் உயிரை துச்சமாக மதித்து மற்ற வீரர்களில் உயிரைக் காப்பாற்ற போராடியதால் அவருக்கு Star of Military Valour விருது போதாது, இராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான Victoria Cross என்னும் மெடல் வழங்கப்படவேண்டும் என அவரது சகாக்கள் கனேடிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதற்காக முயற்சிகள் எடுத்து வருபவர்களில் ஒருவரான John Thomson என்னும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர், நகர கவுன்சில் முன் ஆஜராகி, தன் சகாவான Larochelleக்கு ஏன் Victoria Cross மெடல் வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பாக விளக்கியுள்ளார்.
மீண்டும் கவுன்சில் இம்மாதம் (மார்ச்) 14ஆம் திகதி கூட உள்ளது.