பிரான்ஸ் உணவகத்தில் உணவருந்திய பெண் பலி: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
பிரான்சிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய சுற்றுலாப்பயணிகள் பலர் நோய்க்கிருமி ஒன்றின் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், ஒரு பெண் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்பை ஏற்படுத்திய உணவு
தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகரில் அமைந்துள்ளது Tchin Tchin உணவகம். இங்கு கிடைக்கும் ஒயின் மற்றும் உணவுக்காக, சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் குவிவதுண்டு.
இந்நிலையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் 4ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் அந்த உணவகத்தில் உணவருந்திய ஒரு பெண் உயிரிழந்துவிட்டார். அத்துடன், அதே உணவகத்தில் உணவருந்திய 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
என்ன பிரச்சினை?
பாதிக்கப்பட்ட இந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும், botulism என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சாப்பிட்ட, பதப்படுத்தப்பட்ட மத்தி அல்லது சாளை மீனில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியின் பாதிப்பு இருந்துள்ளது. அதாவது, அந்த மீனை பதப்படுத்தும்போது அதை கிருமிநீக்கம் செய்வார்கள். இந்த மீன்களில் சரியாக கிருமிநீக்கம் செய்யப்படாததால், அவற்றை சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த botulism என்னும் உயிர்க்கொல்லி நோய், Clostridium botulinum என்னும் பாக்டீரியா உருவாக்கும் நச்சுப்பொருளால் ஏற்படுகிறது. பதப்படுத்தும்போது சரியாக கிருமிநீக்கம் செய்யப்படாத உணவை இந்த பாக்டீரியா பாதிக்கக்கூடும்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள்?
உயிரிழந்த பெண் எந்த நாட்டவர் என்ற தகவல் வெளியாகவில்லை. அவரைத் தவிர்த்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா நாட்டவர்கள் ஆவர். ஜேர்மன் நாட்டவர் ஒருவர் தான் தன் நாட்டிலேயே சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதாகக் கூறி ஜேர்மனிக்கு சென்றுவிட்டார்.
அதேபோல, ஸ்பெயின் நாட்டவர் ஒருவரும் சிகிச்சைக்காக சொந்த நாடு திரும்பிவிட்டார்.
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |