கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை! பிரேத பரிசோதனையில் தெரியவந்த தகவல்கள்
கேரளாவில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர், விசாரணை கைதியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அக்கம்பக்கத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக போலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
போலிசார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவி வந்தனா தாஸ், சந்தீப்புக்கு சிகிச்சையளித்துள்ளார்.
சந்தீப்பின் உடலில் உள்ள காயங்களுக்கு மருந்து அளித்துக்கொண்டிருக்கும் போதே, வந்தனா தாஸை தாக்கியுள்ளார்.
கத்தியை கொண்டு பலமாக தாக்கியதில் வந்தனா தாஸ் வலியால் கதறி துடித்துள்ளார்.
உடனடியாக அவருக்கு சிகிச்சையளித்த போதும், பலனின்றி வந்தனா தாஸ் உயிரிழந்தார், இச்சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரவும் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.
இந்நிலையில் வந்தனா தாஸின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், வந்தனா தாஸின் உடலில் 11 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலையில் மூன்று முறையும், முதுகில் ஆறு முறையும் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தீப் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் வந்தனா தாஸின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் அவரது சொந்த ஊரான Kaduthuruthy யில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.