விதிகளை மீறியதுடன் தனிப்பட்ட சலுகையும் கேட்ட பெண் அரசியல்வாதி: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், விதி மீறல் ஒன்றைச் செய்து சிக்கியதுடன், அது தொடர்பாக அதிகாரிகளிடம் சலுகைகளும் கேட்டதாக எழுந்துள்ள புகார் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதிமீறல் செய்து சிக்கிய அட்டர்னி ஜெனரல்
தற்போதைய பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், முன்பு அட்டர்னி ஜெனரலாக இருக்கும்போது, கடந்த கோடையில், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணித்தபோது பொலிசார் அவரைப் பிடித்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோர், குறிப்பாக அதிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தில் அபராத புள்ளிகளும் பதிவு செய்யப்படும்.
மூன்று ஆண்டுகளில் 12 அல்லது அதற்கு அதிகமான அபராத புள்ளிகளைப் பெறுவோர், வாகனம் ஓட்டும் தகுதியை இழப்பார்கள்.
அல்லது, சில சூழல்களில், அவர்கள் வாகன ஓட்டுதல் விழிப்புணர்வு வகுப்பு ஒன்றில் பங்கேற்க அறிவுறுத்தப்படுவார்கள்.
விதிமீறியதுடன் சலுகையும் கேட்ட சுவெல்லா
விதிமீறலில் ஈடுபட்டு சிக்கிய சுவெல்லா, அதிகாரிகளிடம் தனக்கு தனிப்பட்ட சலுகைகள் அளிக்குமாறு கேட்டுள்ளார். அபராதம் செலுத்தி, அபராத புள்ளிகள் பெறுவது தனது ஓட்டுநர் உரிமத்தை பாதிக்கலாம் என்பதால், அதற்கு பதிலாக தனக்கு விழிப்புணர்வு வகுப்பு ஒன்றில் பங்கேற்க வழி செய்து தருமாறு கேட்டுள்ளார் அவர்.
ஆனால், அந்த வகுப்புகளிலும் மற்றவர்களுடன் இணைந்து பங்கேற்காமல், தனக்கு மட்டும் தனியாக வகுப்பு நடத்தமுடியுமா என்றும் கேட்டுள்ளார் சுவெல்லா.
இதற்கிடையில், அட்டர்னி ஜெனரலாக இருந்த சுவெல்லாவுக்கு உள்துறைச் செயலராக பதவி வழங்கப்பட, விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க தனக்கு நேரமில்லை, தான் பிஸி என்று கூறி, அபராதம் செலுத்தியுள்ளார்.
தற்போது, இந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்துள்ள லேபர் கட்சி துணைத்தலைவரான Angela Rayner, இந்த விடயத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அறிய உடனடியாக விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடுமாறு பிரதமர் ரிஷியை வலியுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.