பிரித்தானியாவில் மூன்றில் ஒரு பெண் மருத்துவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்: நாட்டை பரபரப்படையச் செய்துள்ள தகவல்
கணவன் தவிர்த்து ஒரு பெண் தன் உடலை இன்னொருவரிடம் நம்பி ஒப்படைக்கிறாளென்றால், அது மருத்துவரிடம் மட்டும்தான் என்றொரு சொல் வழக்குண்டு.
ஆனால், மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லை, பிரித்தானிய மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பெண் மருத்துவர் சக மருத்துவர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார் என வெளியாகிவரும் தகவல்கள் பிரித்தானியாவில் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
மருத்துவ உலகில் உலவும் பயங்கரங்கள்
கடவுளுக்கு அடுத்தபடியாக மனிதன் நம்புவது மருத்துவர்களை என்று கூறுவார்கள். ஆனால், அப்படி உயிர் காக்கும் பொறுப்பிலிருக்கும் மருத்துவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் அனைவருமே எல்லா பெண்களையும் பிள்ளைகள் போல பார்ப்பவர்கள் என்று கூறமுடியாது.
பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய மருத்துவர் ஒருவர் சிறை சென்ற விடயம் சிலருக்கு நினைவிருக்கலாம். வெளி உலகில் ஒரு பெண்ணிடம் பேச முடியாத விடயங்களை, மருத்துவமனை ஊழியர்கள் சர்வசாதாரணமாக பேசுவதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
எக்ஸ்ரே எடுக்கச் சென்ற பெண் ஒருவரிடம், உள்ளாடையில் பின் குத்தியிருக்கிறீர்கள், அதை அகற்றுங்கள் என ஒரு ஆண் டெக்னீஷியன் கூறியதைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த அந்த எழுத்தாளர், ஒரு பெண்ணின் உள்ளாடை குறித்து இப்படி அப்பட்டமாக ஒரு ஆண் வெளி உலகில் பேசமுடியுமா என்று எண்ணி தான் சங்கோஜமடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு இளைஞர், தன் சகோதரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது, அறுவை சிகிச்சை அறையில், மயக்கம் சரியாக தெளியாத நிலையில், யாரோ அந்தப் பெண்ணின் உடலை, உடையை விலக்கி பார்த்ததாக அவர் தன் சகோதரரிடம் கூறியதாகவும், வெளியே சொல்லக்கூட இயலாத நிலையில் தான் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பெண் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பில்லை
இந்த நிலை பெண் நோயாளிகளுக்கு மட்டும் இல்லை. பெண் மருத்துவர்களுக்கும் இந்த நிலைதான். குறிப்பாக, படித்து முடித்துவிட்டு, புதிதாக அறுவை சிகிச்சை அறைக்குச் செல்லும் இளம் பெண் மருத்துவர்களிடம், மூத்த ஆண் மருத்துவர்கள் அத்துமீறுவதாகவும், அந்த மருத்துவரைக் குறித்து புகார் கூறினால், அவர் தன் பணிக்கு உலை வைத்துவிடுவார் என்பதால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துவரும் இளம்பெண் மருத்துவர்கள் பலர் உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
பிரித்தானியாவில் இப்படி பாதிக்கப்பட்ட சில பெண் மருத்துவர்கள், தாங்கள் சந்தித்த பயங்கரங்களை இப்போது வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.
CREDIT: JONATHAN SUMBERG
ஜூடித் (Judith) என்னும் பெண் மருத்துவர், படித்து முடித்து முதன்முதலாக அறுவை சிகிச்சை அறைக்குச் சென்றிருக்கிறார். அறுவை சிகிச்சையின்போது அங்கிருந்த மூத்த மருத்துவர் ஒருவருக்கு அதிகமாக வியர்த்துள்ளது.
உடனே அவர், சட்டென இந்த இளம் பெண் மருத்துவரின் மார்பில் முகத்தை வைத்து அழுத்தித் துடைத்தாராம். திடுக்கிட்ட அந்த இளம்பெண், மீண்டும் அவர் தன் மார்பில் முகத்தைத் துடைக்க வரும்போது, டவல் ஒன்றை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
உடனே அந்த ஆண் மருத்துவர், இல்லை, உன் மார்பில் முகத்தைத் துடைப்பதுதான் ஜாலியாக இருக்கிறது என்று கூற, அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அந்த இளம் பெண் மருத்துவர். விடயம் என்னவென்றால், அந்த அறையிலிருந்த மற்றவர்களும் இதைப் பார்த்தும் பார்க்காதது போலவே இருந்துவிட்டார்களாம்!
இவராவது இந்த அளவில் தப்பினார். மற்றொரு இளம்பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகமே செய்துள்ளார் மூத்த மருத்துவர் ஒருவர். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, அன்றடாம் பல பயங்கரங்கள் மருத்துவ உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மூத்த மருத்துவர்களிடம்தான் அறுவை சிகிச்சை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை உள்ளதால் பல பெண்கள் அமைதியாக இருந்துவிட, பல மருத்துவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெண் பிள்ளைகளிடம் அத்துமீறிவருகிறார்கள்.
ஆய்வு தெரிவிக்கும் அதிரவைக்கும் தகவல்
பிரித்தானியாவில் மருத்துவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அதிரவைக்கும் சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
ஆம், 63 சதவிகித பெண் மருத்துவர்கள், சக மருத்துவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள்.
30 சதவிகித பெண் மருத்துவர்கள், சக மருத்துவரால் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்கள்.
11 சதவிகித பெண் மருத்துவர்கள், பணி செய்யவேண்டுமானால் சக மருத்துவர்களுடன் உடல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டுள்ளார்கள்.
11 பெண்கள், தாங்கள் வன்புணரப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்கள்.
பெண்களில் 90 சதவிகிதத்தினரும், ஆண்களில் 81 சதவிகிதத்தினரும் ஏதாவது ஒரு வகையில், பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள்.
இந்த ஆய்வு முடிவுகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையே ஆட்டம் காண வைக்கப்போகின்றன என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான Exeter பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr Christopher Begeny.
ஆக, வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளும், செய்திகளும் பிரித்தானிய மருத்துவ உலகை கலகலக்கச் செய்ய உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆம், இந்த பாலியல் புகார்கள் தொடர்பில் விசாரணை நடத்த இருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அறிவித்துள்ளார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |