கடைசி பந்தில் 5 ரன் தேவை - ஃபீல்டர் செய்த சம்பவத்தால் நிகழ்ந்த காமெடி சம்பவம்
கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஃபீல்டர் வேற லெவல் சம்பவத்தால் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே சில வேடிக்கையான சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி அனைத்து தரப்பினரையும் கவர்வது வழக்கம்.
அந்த வகையில் வேடிக்கையான சம்பவம் ஒன்று பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அரங்கேறியுள்ளது. அங்கு Al-Wakeel Cricket League என்ற பெயரில் 20 ஓவர் லீக் போட்டித் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில், Audionic மற்றும் AutoMall ஆகிய இரு அணிகளும் மோதியுள்ளது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த Audionic அணி 154 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி ஆடிய AutoMall அணிக்கு கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. சிக்ஸ் அடித்தால் வெற்றி, பவுண்டரி அடித்தால் டிரா என்ற நிலையில் கடைசி பந்தினை மிகவும் அற்புதமான ஒரு யார்க்கராக பந்து வீச்சாளர் வீச அதனை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் லாங் ஆப் திசையை நோக்கி அடித்தார்.
அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற வீரர் பந்தை பிடிக்க அவ்வளவு தான் போட்டி முடிந்தது என அங்கிருந்தவர்கள் நினைக்க அந்த ஃபீல்டரோ, பந்தினை எறியாமல் நேராக ஸ்டம்பை நோக்கி வேகமாக ஓடி வந்தார். தொடர்ந்து, பவுலிங் சைடு ஸ்டம்பிலும் அடித்தார். அப்போது பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் தான் இருந்தார். ஆனால், அந்த ஃபீல்டர் ஸ்டம்பில் அடித்ததும் பேட்ஸ்மேன்களும் ரன் ஓட ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில் பந்தினை கீப்பர் கைக்கு வீசாத அதே வீரர் பந்துடன் ஸ்டம்பை நோக்கி ஓடினார். பிறகு, அருகே சென்றதும் ஸ்டம்பில் பந்தினை அடிக்காமல் ரன் அவுட் செய்வதற்கு வேண்டி வேகமாக வீச அது ஸ்டம்பில் படாமல் கீப்பரையும் தாண்டி சென்றது. பீல்டரின் தவறால், பேட்ஸ்மேன்கள் ரன்னை ஓடி எடுக்க எதிரணி அதிசயமாக வெற்றியும் பெற்றது.