இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்த பிபா! அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பதவி காலம் 4 ஆண்டுகள், ஒரு நபர் 3 முறை தான் தலைவர் பதவியில் இருக்க முடியும்
ஆகத்து 28ஆம் திகதி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சங்கமான பிபா, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 வயதிற்குட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை போட்டித் தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றிருந்தது. 2020ஆம் ஆண்டில் நடக்கவிருந்த இந்த தொடர், கொரோனா பரவல் காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11ஆம் திகதி தொடங்கவிருந்த நிலையில், பிபாவின் அறிவிப்பு இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, இந்தியா மகளிர் உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், இந்திய கால்ப்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்வதாகவும் பிபா அறிவித்துள்ளது.
இதற்கு காரணம், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதற்காக நடத்தப்படும் தேர்தலில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் பிபாவிற்கு தெரிய வரவே, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையில் தனிநபர்களின் சேர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என பிபா இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தது.
அதன் பின்னரே பிபா உரிமத்தை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர்களின் தலையீடு இருப்பதால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்வதாக பிபா கூறியுள்ளது.
இதன் காரணமாக உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.