6 நாடுகளில் மூன்று வெவ்வேறு கண்டங்களில்... உலக கிண்ணம் கால்பந்து குறித்து புதிய தகவல்
ஃபிஃபா உலக கிண்ணம் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் 2030 கால்பந்து உலக கிண்ணம் போட்டிகளை மூன்று வெவ்வேறு கண்டங்களில் 6 வெவ்வேறு நாடுகள் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மூன்று ஆட்டங்கள்
2030 கால்பந்து உலக கிண்ணம் போட்டிகளை ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ ஆகிய மூன்று நாடுகளும் உத்தியோகப்பூர்வமாக நடத்த உள்ளது. ஆனால் முதல் மூன்று ஆட்டங்கள் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவேயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
இது கால்பந்து போட்டிகளுக்கு தென் அமெரிக்க தொடர்பை ஆதரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கிண்ணம் தொடரில், போட்டிகளை நடத்தும் 6 நாடுகளும் தானாகவே தகுதி பெறுகிறது.
ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் 2030 கால்பந்து உலக கிண்ணம் போட்டிகளை இணைந்து நடத்த இருப்பதாக அறிவித்தது. ஆனால் 2017ல் இருந்தே உருகுவே மற்றும் அர்ஜென்டினா நாடுகள் நூற்றாண்டு விழா போட்டிகளை தாங்களும் இணைந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது.
1930ல் உலக கிண்ணம் போட்டியின் முதல் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்த இரு அணிகளில் உருகுவே வெற்றி பெற்றது. 2030 போட்டிகளை இணைந்து நடத்த சவுதி அரேபியாவும் கிரேக்கம் மற்றும் எகிப்துடன் களமிறங்கியது.
6,000 மைல்களுக்கு அப்பால்
ஆனால் அதன் பின்னர் 2034 போட்டிகளை தாங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்தது. 2030ல் முதல் ஆட்டம் உருகுவே நாட்டின் Montevideo பகுதியில் நடைபெறும். முதல் உலக கிண்ணம் போட்டிகளை முன்னெடுத்து நடத்திய நாடு என்பதுடன், முதல் வெற்றியாளரும் உருகுவே தான்.
@getty
இரண்டாவது ஆட்டம் அர்ஜென்டினாவில் நடைபெறுகிறது. மூன்றாவது ஆட்டம் பராகுவேயில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து எஞ்சிய 101 ஆட்டங்களும் ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும்.
துவக்க விழா கொண்டாட்டங்கள் ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோவில் நடைபெற, முதல் ஆட்டம் 6,000 மைல்களுக்கு அப்பால் உருகுவே நாட்டில் நடக்க இருப்பது தான் வினோதமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |