கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் கோலை தடுத்த அர்ஜெண்டினா கோல் கீப்பர் கால்! வாழ்நாள் நினைவாக செய்த காரியம்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியின் இறுதிநேர கோலை தடுத்த காலில் அர்ஜென்டினா கோல்கீப்பர் உலகக்கோப்பை டாட்டூ குத்தியுள்ளார்.
அர்ஜென்டினா அணி
கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது.
கால்பந்து உலகின் ஜாம்பவானும், அர்ஜென்டினா கேப்டனுமான லயோனல் மெஸ்சி முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்திய பொன்னான தருணமும் இது தான். இந்த ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
Instagram/emi_martinez26
வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால், தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 107-வது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி கோல் அடித்து உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.
பிரான்ஸ் வீரர் எம்பாபோ கோல்
அந்த கோல் மூலம் அர்ஜென்டினா 3-2 கோல் கணக்கில் முன்னிலைக்கு வந்தது. இதனால், கோப்பை அர்ஜென்டினாவுக்கு தான் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால், ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 118-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் எம்பாபோ கோல் அடித்தார். இதனால், பிரான்ஸ் அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
இதன் மூலம் 3-3 என்ற கணக்கில் சமநிலை வகித்தது. இதன் பின்னர் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் முன்கள வீரர் கோலோ முவானி அடித்த ஷாட்டை அர்ஜென்டினா கோல்கீப்பர் மார்ட்டினெஸ் அற்புதமாக செயல்பட்டு தனது இடது காலால் கோல் செல்ல விடாமல் தடுத்தார்.
டாட்டூ
ஒருவேளை அது கோலாகி இருந்தால் பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்கும். இந்நிலையில், அந்த நிகழ்வை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் விதமாக, பந்தை தடுத்த இடது காலில் மார்ட்டினெஸ் டாட்டூ குத்தியுள்ளார். அர்ஜெண்டினாவை சேர்ந்த டாட்டூ ஆர்டிஸ்டான ஜுயன் பப்லோ ஸ்குன்சாவின் கை வண்ணத்தில் இது சாத்தியமாகியுள்ளது.
Instagram/emi_martinez26