சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் ஐந்தாவது அலை... அரசு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் ஐந்தாவது அலை துவங்கிவிட்டதாக சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் ஐந்தாவது அலை காணப்படுகிறது, என்றாலும், தடுப்பூசிகள் இருப்பதால், நாம் கடந்த ஆண்டிலிருந்ததைவிட இப்போது கொஞ்சம் மேம்பட்ட சூழலில் இருக்கிறோம் என்றார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset.
மருத்துவத்துறை இயக்குநர்களின் மாகாண அமைப்பின் தலைவரான Lukas Engleberger கூறும்போது, தடுப்பூசிகளும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளனவா இல்லையா, மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாக்கப்படுமா இல்லையா என்பதை அடுத்த சில வாரங்களில் காட்டிவிடும் என்றார்.
அதே நேரத்தில், ஜேர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் காணப்படும் நிலைமை, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதை உணர்த்துகிறது என எச்சரித்துள்ளார் அவர்.
இப்போதைக்கு சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்கள், பள்ளிகளை மூடுதல், மாஸ்க் அணிவது கட்டாயம் முதலான கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது என்கிறார்.