சூரிச் விமான நிலைய சிறையில் இளைஞர்... நாடுகடத்தப்படும் அபாயம்: போராடும் சுவிஸ் காதலி
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடுகடத்தப்படும் அபாயம் இருப்பதால், தமது காதலருக்காக சுவிஸ் இளம்பெண் போராடி வருகிறார்.
தற்போது சூரிச் விமான நிலைய சிறையில் இருக்கும் 26 வயது சோமாலிய இளைஞருக்காகவே, சுவிஸ் இளம்பெண் போராடி வருகிறார். 6 வருடங்களுக்கு முன்னர் அகதியாக சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார் குறித்த சோமாலிய இளைஞர்.
சில மாதங்களுக்கு பின்னர் சூரிச் பகுதி இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழக, நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கும் வந்துள்ளனர். இந்த நிலையில் 2015ல் புகலிடக் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் ஓராண்டுக்கு பின்னர் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை நாடியும் இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சூரிச் விமான நிலையத்தில் உள்ள சிறையில் உள்ளார் என அவரது காதலி Angelique தெரிவித்துள்ளார்.
சோமாலியாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து எனவும், அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என Angelique அச்சம் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி குல விரோதம் காரணமாக இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், இவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் Angelique சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், தமது காதலரை நாட்டைவிட்டு வெளியேற்ற அனுமதிக்க முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.