தப்பிக்கும் வழிகள் இனி இல்லை... காபூளில் இருந்து புறப்பட்டது பிரித்தானியாவின் கடைசி விமானம்: சிக்கிய அப்பாவிகள்
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரித்தானியாவின் கடைசி விமானம் காபூளில் இருந்து புறப்பட்டுள்ளது.
குடியுரிமை பெற தகுதிவாய்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஆப்கானிஸ்தானில் கைவிட்டு, பிரித்தானியா மீட்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
பிரித்தானியாவின் கடைசி விமானம் இன்று மதியத்திற்கு மேல் புறப்பட்டுள்ளது என்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
குறித்த விமானத்தில் ஆப்கன் மக்கள் மட்டுமே இருப்பார்கள் எனவும், இதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்படும் பொதுமக்களுக்கான கடைசி விமானம் எனவும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இனி தூதரக அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினருக்கான விமானம் மட்டும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்பிக்கும் கடைசி வாய்ப்பும் அப்பாவி ஆப்கன் மக்களின் கண் முன்னே முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் தாலிபான் தீவிரவாதிகளும் ஒப்புக்கொண்ட காலக்கெடு ஆகத்து 31 உடன் முடிவுக்கு வரும் நிலையிலேயே, ஆப்கானிஸ்தானில் இருந்து பொதுமக்களுக்கான விமான சேவைகளை பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தன.
இதில் சுமார் 15,000 பிரித்தானிய குடிமக்கள் மற்றும் குடியுரிமை பெற தகுதி வாய்ந்த ஆப்கன் மக்கள் விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.